Vikatan - Student Registration Form

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்...

student banner

இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டை தீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

கையில் இருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூ-டியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையில் இருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கென தனி முத்திரை பதித்து, வெற்றிப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் என, தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள். இதோ, இது உங்களுக்கான நேரம்.

இளமைக்கு ‘ஆ.வி’, உண்மைக்கு ‘ஜூ.வி’, பெண்மைக்கு ‘அவள்’, அறிவுக்கு ‘சுட்டி’, அருளுக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, நலத்துக்கு ‘டாக்டர்’, அறுசுவைக்கு ‘அவள் கிச்சன்’ இல்லறம் சிறக்க ‘அவள் மணமகள்’ இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூ-டியூபில் ‘விகடன் டி.வி’ என உலகின் கடைக்கோடி தமிழன் வரை நீண்டிருக்கின்றன விகடனின் கரங்கள். அவற்றைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அட்டகாசமான வாய்ப்பு.

1.7.2000-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ- மாணவியர், தற்போது (2017 - 2018) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2018 - 2019) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2017 - 2018-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ, விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.03.18-ம் தேதிக்குள் எங்களின் பரிசீலனைக்கு அனுப்பவேண்டியது அவசியம் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல்தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம். 

ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களம் இறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!

- ஆசிரியர்

விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:

(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை, சொந்தக் கையெழுத்தில் தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும்.

1) ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் தவிர்த்து நீங்கள் அடிக்கடி பார்க்கும் வலைதளங்கள் என்னென்ன? அவற்றின் பயன்கள், அவற்றின் உங்கள் அனுபவங்கள் பற்றி எழுதவும்.

2) உங்கள் மொபைலில் நீங்கள் அதிகளவில் பயன்படுத்தம் APP எது? (வாட்ஸப் தவிர்த்துவிட்டு பதில் சொல்லவும்!)

3) 'ரஜினி, கமல் அரசியல் என்ட்ரி.. யாருக்குக் கிடைக்கும் விக்டரி' என்ற தலைப்பில், இருவரின் அரசியல் நகர்வுகள், கொள்கைகள், தேர்தல் பயணம் ஆகியவற்றை ஆராய்ந்து, அலசி, யாருக்கு அரசியல் கைகூடும் என அலசல் கட்டுரை அனுப்புக .

4) 'அம்மா வழியில் நடக்கும் அரசு' என மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கும் எடப்பாடி ஆட்சியை எடை போட்டு விடை தேடும் கட்டுரை படையுங்கள்.

5) பானிபூரி தொடங்கி ஃபிரைடு ரைஸ் வரை பெருகிவருகிறது துரித உணவு கலாசாரம். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

6) உங்கள் பகுதி அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் எப்படி இயங்குகிறது?

7) பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களை சமூகம் 'அது அவர்களின் தப்பு' என்றே இன்றும் பார்க்கிறது. தவறு பெண்களிடம் இல்லை, அவர்களைப் பார்க்கும் கண்களில் என்பதை உணர்த்துவதற்கான மாற்றம் எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும்? அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்?

8) காதல் தோல்விகளில் இருந்து மீண்டிருக்கும் நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று கொண்டாடு கிறது இளைய தலைமுறை. ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி காதலை, காதல்களைக் கடந்து செல்லும் பெண்ணுக்கான தராசு என்னவாக இருக்கிறது? வீட்டுப் பெரியவர்களின் மனநிலையை விட்டுவிடுங்கள். உங்கள் மனசிலிருந்தும், உங்கள் நண்பர்கள், தோழிகளின் இதயங்களில் இருந்தும் வார்த்தைகள் எடுத்து எழுதுங்கள். இன்றைய ஜென் z தலைமுறை 'பிரேக்-அப்' ஆன பெண்களை எப்படி எடைபோடுகிறது?

9) இப்போது நிறைய இளைஞர்களின் கவனம் விவசாயம் பக்கம் திரும்பியிருக்கிறது. அது சரியா? உங்கள் பார்வை என்ன?

10) போலி செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவதில் வாட்ஸ் அப் முக்கியப் பங்காற்றுகிறது. இதை எப்படித் தடுக்கலாம்? வாட்ஸ் அப் போன்ற தொழில்நுட்பங்களை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது?

(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, எதிர்வரும் நாட்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக, வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு இணையுங்கள்.

(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.

(ஈ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் பங்களித்த வீடியோக்களை சி.டி.-/டி.வி.டி வடிவில் அனுப்ப வேண்டும் (இதே விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்தால், அதற்கான லிங்க்குகளை (Link) குறிப்பிட்டால் போதும்).

இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.03.18-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்தகட்டமாக சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். இது குறித்த தகவல் தங்களுக்குக் கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும் முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.

எங்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  600 002.

register