student banner

இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டை தீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

கையில் இருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூ-டியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையில் இருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கென தனி முத்திரை பதித்து, வெற்றிப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் என, தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள். இதோ, இது உங்களுக்கான நேரம்.

இளமைக்கு ‘ஆ.வி’, உண்மைக்கு ‘ஜூ.வி’, பெண்மைக்கு ‘அவள்’, அருளுக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூ-டியூபில் ‘விகடன் டி.வி’ என உலகின் கடைக்கோடி தமிழன் வரை நீண்டிருக்கின்றன விகடனின் கரங்கள். அவற்றைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அட்டகாசமான வாய்ப்பு.

1.7.2003-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ- மாணவியர், தற்போது (2020 - 2021) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2021 - 2022) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2020 - 2021-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ, விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 31.03.2021-ம் தேதிக்குள் எங்களின் பரிசீலனைக்கு அனுப்பவேண்டியது அவசியம் (விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து நிரப்பி தபால் அல்லது கூரியர் மூலமும் அனுப்பலாம்.). தகவல்தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை கீழே காணலாம். 

ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களம் இறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!

- ஆசிரியர்

விண்ணப்பத்துடன் தவறாமல் இணைக்கவேண்டியவை:

(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை சொந்தக் கையெழுத்தில் தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும். இணையத்திலிருந்தோ, வேறு புத்தகத்திலிருந்தோ எடுத்து எழுதக் கூடாது. அப்படி எழுதியது கண்டறியப்பட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

1. டூரிங் டாக்கீஸ்/சாதாரண தியேட்டர், ஷாப்பிங் மால் தியேட்டர், ஓ.டி.டி இப்படி மூன்றிலும் திரைப்படங்களைப் பார்த்த உங்கள் குடும்பத்தினர் (தாத்தா/பாட்டி, அம்மா/அப்பா, மாமா/அத்தை) மற்றும் உங்களின் சுவையான அனுபவங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையாக்குங்கள்.

2. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள் அப்படி எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது அல்லது இல்லை என்று நீங்கள் எந்தப் பக்கம் நின்றாலும், அதற்கான காரண காரியங்களை எடுத்து வைத்து விரிவாக எழுதுங்கள்

3. ‘படித்து முடித்தபின் டீசன்டான சம்பளத்தில் நல்ல வேலைக்குச் செல்லலாமா’, ‘இப்போது கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் குரோர்பதி ஆகும் திட்டத்தோடு சொந்தத் தொழில் தொடங்கலாமா’ என்பதில், இன்றைய இளைஞர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கமாக எழுதவும்.

4. "2 கே கிட்ஸ் என்றழைக்கப்படும் இன்றைய இளசுகளிடம் ஆண் - பெண் என்ற பால் பேதமெல்லாம் கிடையாது" என்கிறது உலகம். இந்த விஷயத்தில் உங்கள் கல்லூரியில் உங்களுடைய அனுபவங்களைத் தொகுத்து ஜாலியாக எழுதுங்களேன்.

5. உங்கள் ஊரின் கதையைச் சொல்லும் மண்மணக்கும் ஆலயங்கள்/எல்லைச் சாமிகளின் மகத்துவங்கள்/பாரம்பர்யமிக்க வட்டாரத் திருவிழாக்கள் இவற்றில் ஏதாவது ஒன்று குறித்து சுவாரஸ்யமாக எழுதுங்கள்!

6. பயணம் செய்வதே அலாதியானது. அதிலும், கார்/பைக் என்று நீண்ட தூரப் பயணம் செல்வது அதிஅலாதியானது. நீங்கல் எந்த வாகனத்தில் பயணித்திருந்தாலும் சரி, பயண அனுபவத்தை பட்ஜெட் பயணக் கட்டுரையாக இங்கே எழுதுங்களேன்.

7. அரசியல் கட்சிகள், இப்போதே வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பட்டையக் கிளப்புகின்றன. இன்னும் என்னென்ன வாக்குறுதிகளையெல்லாம் கொடுக்கலாம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் நீங்கள் ஆலோசனைகளைக் கொடுக்கலாமே. உங்களின் வாக்குறுதிகள், 100% வயிற்றுவலிக்கு உத்தரவாதம் தரவேண்டும்.

8. கொரோனா கொடுங்காலத்துக்கு நடுவே தக்கச்சமயத்தில் உரியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி நெகிழ வைத்தவர்கள் ஏராளம். அந்த இளகியநெஞ்சங்கள் அத்தனையுமே மீடியா வெளிச்சத்துக்குள் வந்துவிடவில்லை. உங்கள் பகுதியிலிருக்கும் அப்படிப்பட்ட நெஞ்சங்கள், செய்த உதவிகள், பலனடைந்தவர்கள் என புகைப்படங்களுடன் நெகிழ்வாக எழுதுங்கள்.

9. வாக்களிப்பதற்கான வயது 18 என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது சரி அல்லது சரியில்லை என்று ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் நின்று, உங்கள் கருத்துகளை ஆழமாகவும் அழகாகவும் எழுதுங்கள்.

(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், இந்தக் கட்டுரையை அனுப்பத் தேவை யில்லை. அதற்கு பதிலாக, எதிர்வரும் நாள்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக, வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்புங்கள். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறமும் உங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும். சி.டி-ஆகவும் அனுப்பலாம்.

(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.

(ஈ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் பங்களித்த வீடியோக்களை சி.டி./டி.வி.டி வடிவில் அனுப்ப வேண்டும் (இதே விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்தால், அதற்கான லிங்க்குகளை (Link) குறிப்பிட்டால் போதும்).

* வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் படிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து,31.03.2021-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவையில்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்தகட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 9 ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். அது குறித்த தகவல் தங்களுக்குக் கடிதம் அல்லது மின் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். எங்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

ஆன்லைனில் விண்ணபிப்பவர்கள் கீழே உள்ள "Register Now" பட்டனை கிளிக் செய்யவும்

தனித்தாளில் விண்ணபிப்பவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : Click Here

தனித்தாளில் விண்ணபிப்பவர்கள் தபால் மூலம் அனுப்பவேண்டிய முகவரி:
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  600 002.

register